குதிரையில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள்..!

பெல்ஜியத்தின் வடமேற்குக் கடற்கரைப் பகுதி. அது ஓஸ்ட்டியூன்கிர்க ( OostDuinkerke ) எனும் சிறு கடற்கரை கிராமம். உலகின் எல்லா கடற்கரை கிராமங்கள் போன்றுதான் இதுவும். கடலும், கடல் சார்ந்த வாழ்வையும் கொண்டது. ஆனால், இன்று உலகளவில் இந்தக் கிராமம் குறித்து பேச ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. அது அழகான கடலும், சுவையான இறாலும், பேரழகான குதிரைகளும், அன்பான மனிதர்களும், அவர்களுக்கிடையேயான ஆச்சர்ய உறவுகளையும் கொண்ட ஒரு கதை.

குதிரையின் முதுகில் அமர்ந்து மீன் பிடிக்கும் மீனவர்கள்

அதிகாலை நேரத்திலேயே அடித்துப் பிடித்து கிளம்பும் அவசரம் இல்லா ஓர் இடம் அது. மொத்த கிராமமும் அமைதியான உறக்கத்தில் இருக்கிறது. அங்கு சில வீடுகளில் மட்டும் சின்னச் சின்ன சத்தங்கள் எழும்புகின்றன. அந்தச் சத்தம் வரும் திசையில் பயணத்து, அந்த இடத்தை அடைந்தால், அங்கு குதிரையும், மனிதனும் தயாராகிக் கொண்டிருக்கும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தக் குதிரை ரொம்பவே அழகாக இருக்கிறது. பந்தயங்களில் பறந்தோடும் வகையிலான குதிரை அல்ல அது, அதே சமயம் மூட்டைகளைச் சுமக்கும் கோவேறுக் கழுதை வகையறாவும் இல்லை. இந்தக் குதிரை சற்றே வித்தியாசமாக இருக்கிறது.  சின்னத் தலை, குட்டையான கால்கள், அந்தக் கால்களில் பாதத்தின் அருகே அழகான முடி, பெரிய கழுத்து, உறுதியான தோள்கள், அழகான கண்கள் என அழகும், உறுதியும் ஒருசேர சேர்ந்து காணப்படுகிறது.

இயற்கையின் வழியில் மீன் பிடிக்கும் பெல்ஜியம்காரர்கள்

அந்தக் குதிரை, குதிரை வண்டியில் பூட்டப்படுகிறது. வண்டியில் சில கூடைகள், மீன் வலைகள், மஞ்சள் நிறத்தில் ரெய்ன் கோட் போன்ற ஒரு உடுப்பு, ரப்பர் பூட்ஸ், கயிறு, சல்லடைகள் எனச் சில பொருள்கள் இருக்கின்றன. அந்தக் கிராமத்திலிருந்து விடியற்காலை நேரத்தில், அப்படியான குதிரை வண்டிகளில் வீட்டிலிருந்து கிளம்பி தார்ச்சாலைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்கள் அப்படியே வரிசையாகக் கடற்கரை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார்கள். மொத்தத்தில் 18 அல்லது 19 பேர் இருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கதைகளைப் பேசியபடியே நகரத் தொடங்குகிறார்கள். அவர்கள் கடற்கரை அடைய தோராயமாக இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம்.

இயற்கை வழியில் மீன் பிடி

ஆங்கிலத்தில் ஷ்ரிம்ப் ( Shrimp ) எனச் சொல்லப்படும் ஒரு வகை இறால் மீனைப் பிடிக்கத்தான் இவர்கள் இந்தக் குதிரைகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படியாகக் குதிரைகளில் கடலுக்குச் சென்று இறால்களைப் பிடிக்கும் பழக்கம் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்திருக்கிறது. ஆனால், காலப் போக்கில் அவை அழிந்துவிட்டன. ஆனால், பெல்ஜியத்தின் ஓஸ்ட்டியூன்கிர்க பகுதியில் மட்டும் இந்த நூற்றாண்டுகால பழக்கம் இன்னும் எஞ்சியிருக்கிறது.

பெல்ஜியத்தில் குதிரை கொண்டு மீன் பிடிக்கும் தொழில்முறை

பெல்ஜியத்தின் இந்தக் கடற்கரைப் பகுதிகளில் கிராங்கன் ( Crangon ) எனும் இறால் வகை அதிகளவில் கிடைக்கும். கடற்கரைக்கும் செல்லும் இந்தக் குதிரைகளிலிருந்து, அது கட்டப்பட்டிருக்கும் வண்டிகள் கட்டவிழ்க்கப்படும். முதுகின் இருபுறத்திலிருந்து 10 மீட்டர் தூரத்திற்குக் கயிறு கட்டப்பட்டு அதன் முடிவில் வலை இணைக்கப்பட்டிருக்கும். அதன் முதுகின் இருபக்கமும் கூடைகளைக் கட்டிவிட்டு அதன்மீது ஏறி அமர்வார்கள் அந்த மீனவர்கள். மெள்ள, மெள்ள குதிரையைக் கடலுக்குள் செலுத்துவார்கள். குதிரைகளுக்குக் கடல் அவ்வளவு விருப்பமானவை அல்ல. அந்தக் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்த குறைந்தது ஓராண்டு காலமாவது அவைகளுக்குப் பயிற்சியளிக்கப்பட வேண்டும். இருந்தும் ஒவ்வொரு முறையும் கடலுக்குள் செல்லும்போது அவை பயப்படவே செய்யும். ஆனால், குதிரை ஓட்டும் அவர்களின் தைரியம்தான் குதிரைகளுக்கும் தைரியம் கொடுக்கும். அந்த தைரியத்தின் அடிப்படையில் கடலுக்குள் செல்லும்.

குதிரை மீதமர்ந்து மீன் பிடிக்கும் பெல்ஜியம்காரர்கள்

கரையிலிருந்து பின்னால் கட்டப்பட்டிருக்கும் வலைகளை இழுத்தபடியே கடலுக்குள் நடக்க ஆரம்பிக்கும். குதிரை கழுத்தளவு மூழ்கும் அளவுக்கு நடக்கும். கடல் அலைகளின் ஓட்டத்தையும், காற்றின் திசையையும் கணக்கிட்டு குதிரைகளைச் செலுத்த வேண்டும். பெரும்பாலும், அதிகாலை நேரங்களில் குறைந்த அலையின் போதுதான் இறால்களைப் பிடிக்க சரியான சமயம். அரை மணி நேரம் கடலிலிருந்து கரைக்கு வருவார்கள். சிறிது நேரம் குதிரைக்கு ஓய்வு கொடுப்பார்கள். அதே நேரத்தில் வலையில் சிக்கிய இறால்களைச் சிறு சல்லடையில் போட்டு சலிப்பார்கள். அதில் சின்ன இறால்கள் மற்றும் வேறு சிறு உயிரினங்கள் கீழ் விழும். அதை மீண்டும் கடலுக்குள் தூக்கியெறிந்து விடுவார்கள். பின்னர், ஓய்விற்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் செல்வார்கள். இப்படியாக, ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்வார்கள். ஒரு நாளைக்கு 20 கிலோ இறால்கள் வரைப் பிடிக்கிறார்கள். வருடத்தின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் முழுவீச்சில் இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.