நயன்தாரா வாடகை தாய் விவகாரத்தை அடுத்து பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயபடுத்துவது குறித்து சோதனையிடும் அதிகாரிகள்!

நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் புகார் எழுந்தது.

அங்குள்ள பெண்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் சூளைமேடு பகுதியில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சூளைமேடு பகுதியில் மட்டும் பல வீடுகளில் வாடகை தாய்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் வங்காளதேசம், நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ளனர். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களே பெரும்பாலும் வாடகை தாய்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதில் பலருக்கு திருமணமே ஆகவில்லை. குடும்ப வறுமையை பயன்படுத்தி இந்த செயலில் அவர்களை ஈடுபட வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் பகலில் வெளியில் வர அனுமதிக்கப்படுவதில்லை.

இரவு நேரத்தில் மட்டுமே வெளியில் வர முடியும். மேலும் டாக்டர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த விவகாரம் சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விஸ்வநாதன், கிருஷ்ணா உள்பட 4 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. சுகாதாரத்துறையில் உள்ள ஊரக வளர்ச்சி பணிகள் திட்ட முகமையை சேர்ந்த இந்த குழுவினர் நேற்று சூளைமேட்டில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.