இணையத்தில் லீக் ஆன போக்கோ F5 5ஜி வெளியீட்டு விவரம்!

போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போக்கோ F5 5ஜி மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் புதிய போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அடங்கிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் 23013PC75I எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய போக்கோ F5 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 7XX சீரிஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக போக்கோ அறிமுகம் செய்த போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 27 ஆயிரத்து 999 எனும் துவக்க விலை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போக்கோ F5 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

சீன சந்தையிலேயே ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போக்கோ F5 5ஜி மாடலில் 6.67 இன்ச் QHD+ AMOLED பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் மற்றும் MIUI வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP மற்றும் 2MP கூடுதல் சென்சார்கள், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் புதிய போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இதில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.