இங்கிலாந்து இந்தியாவிற்கு இடையிலான இறுதி போட்டி மோதல் இன்று

8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது.

தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். 2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (10 விக்கெட்) மட்டும் தொடர்ச்சியாக விக்கெட் அறுவடை நடத்துகிறார்.

புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரும் கைகொடுத்தால் எதிரணியை அச்சுறுத்தலாம்.விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை பந்தாடியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 7 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்ததால் தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அரையிறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது. இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. என்றாலும் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர்.

பந்து வீச்சில் சாம் கர்ரன் (10 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் மார்க்வுட் (9 விக்கெட்), டேவிட் மலான் ஆடுவது சந்தேகம் தான். எப்படி பார்த்தாலும் இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங். இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.