சிதம்பரம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவனிடம் 2-வது நாளாக 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மாணவனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.