கிளிநொச்சியில் குளிர் தாங்க இயலாமல் உயிரிழக்கும் கால்நடைகள்

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் மற்றும் மழை காரணமாக 40 மாடுகளும், 3 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று (9.12.2022) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரின் பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.

கால்நடைகள் உயிரிழப்பு
இந்த நிலையில் குறித்த பண்ணையில் உள்ள மேலும் சில கால்நடைகள் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே அந்த கால்நடைகளை காப்பாற்றும் வகையில் தீ மூட்டும் செயற்பாட்டில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.