டி 20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோத தயாராகும் இந்திய அணி!

டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வரும் 23-ம் தேதி மோதுகிறது. இந்நிலையில், 16 அணிகளின் கேப்டன்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி விடுவோம்.

அப்போட்டியில் யார் விளையாட போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடைசி நிமிடத்தில் யாரிடமாவது நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று சொல்வதை நான் விரும்பவில்லை. காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி. அதை எதுவும் செய்ய முடியாது. நிறைய போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்படும். எங்களது கவனம் அணியை வலுப்படுத்துவதில் உள்ளது. அதனால்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறோம்.

பும்ரா காயம் பற்றி நிபுணர்களிடம் பேசினோம். உலக கோப்பை போட்டி முக்கியம். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது. அவரை நாங்கள் தவறவிடுகிறோம். முகமது சமி கொரோனாவில் இருந்து மீண்டு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடினமாக உழைத்தார். அவர் நன்கு குணமடைந்துள்ளார். தற்போது அவர் பிரிஸ்பேனில் உள்ளார். அங்கு இந்திய அணி நாளை சென்றடையும். அவர் அணியுடன் பயிற்சி செய்வார். சூர்யகுமார் யாதவ் சிறந்த நிலையில் உள்ளார்.

அவர் அந்த பாணியிலேயே பேட்டிங் செய்வார் என்று நம்புகிறேன். அவர் நம்பிக்கை நிறைந்த வீரர். அவர் பயமின்றி விளையாடுகிறார். தனது திறமையை நன்றாக பயன்படுத்துகிறார். சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்காற்றுவார் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சந்திக்கும்போது எங்களது குடும்பம் மற்றும் அனைவரையும் பற்றி பேசுவோம். நீங்கள் என்ன புதிய கார் வாங்கினீர்கள் என்று கேட்பேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு இருப்பதை நமது முந்தைய தலைமுறை நமக்கு கற்பித்துள்ளது என தெரிவித்தார்.