டி20 உலக கோப்பை கிரிக்கெட்- ஆஸ்திரேலியாவில் இன்று ஆரம்பமாகிறது!

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமீபியா அணிகளும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் முதல் சுற்றில் இருந்து வரும் 4 அணிகளும் இணையும்.

சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்று தொடங்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.

இந்திய நேரப்படி காலை 9.30 மணி இந்த போட்டி தொடங்குகிறது. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.