ரணில் இதை செய்தால் மஹிந்த பதவியை ராஜினாமா செய்வார்! நாமல்

சபாநாயகர் நாடாளுமன்ற மரபுகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறாக பக்கச்சார்பான செயற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும், கரு ஜயசூரியவின் அண்மைய செயற்பாடுகள் அரசியல் ரீதியான பக்கச்சார்பு தன்மையை வெளிப்படுத்தி நிற்பதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு 113 பலம் இருப்பதாக உறுதிபடத்தெரிந்தால் ஆவணமொன்றை கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாறாக இவ்வாறான காரியங்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறான ஓர் நிலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவித்துள்ளார்.

இன்றைய தின நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளதாகவும், சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.