ஒரு கிமீ தூரம் விருந்து துபாயில் இந்தியர் சாதனை..!

துபாயில் உள்ள இந்திய தொண்டு நிறுவனம், ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு விருந்தளித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

துபாயில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலாரியா என்பவர் ‘பெஹல் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன், ‘பி.சி.டி. மனிதநேய அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

அந்தவகையில், ஆண்டுதோறும் ரம்ஜான் நோன்பு காலங்களில் பலருக்கு இப்தார் விருந்து வழங்கி வரும் இவர், கடந்த 18ம் தேதி, அபுதாபி நகர சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு, 7 வகை சைவ உணவுகளை மேஜைகளில் வைத்து பரிமாறி நோன்பாளிகளுக்கு ‘இப்தார்’ விருந்து வழங்கினார்.

‘உலகின் மிக நீளமான பசியாற்றும் நிவாரணம்’ என்ற தலைப்பில் நடந்த இந்த இப்தார் விருந்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.