இதேபோல் விளையாடினால் வெற்றிக்கு தகுதியானவர்கள் அல்ல: புனே தோல்வி குறித்து கோலி கருத்து!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 162 ரன்கள் என்பது கடினமான இலக்கு அல்ல. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சொந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்றில் இரண்டில் தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் 9 போட்டிகள் உள்ளன. ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால்தான் அந்த அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் புனேவிற்கு எதிரான தோல்வி குறித்து விராட் கோலி கூறுகையில், இதுபோன்று ஆடினால் பெங்களூரு அணிக்கு வெற்றி பெறுவதற்கான தகுதியில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘புனே அணிக்கெதிராக விளையாடியதுபோல் ஆடினால், நாங்கள் வெற்றிக்கு தகுதியான அணியாக இருக்க முடியாது. மும்பைக்கெதிரான நான்காவது போட்டியில் கடுமையாக போராடினோம். ஆனால், புனே அணிக்கெதிரான போட்டியில் எங்கள் கண்முன்னே, ஆட்டம் எங்களை விட்டு விலகிச்சென்றது. சில விஷயங்களை நாங்கள் ஆராய வேண்டியுள்ளது.


வாட்சன் போல்டாகிய காட்சி

கடந்த தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் நான்கிலும் வெற்றி பெற்றோம். ஆனால், எப்பொழுதும் இதுபோன்று நிகழாது. தொழில்முறை கிரிக்கெட்டர்களாக, அணி உரிமையாளர்களுக்காகவும், அதிக ரசிகர்களுக்கு மத்தியிலும் விளையாடி கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று தொடர்ந்து செயல்பட இயலாது. இதுபோன்ற சிக்கலில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளையில் வீரர்கள் பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.