விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதி பழநெடுமாறன் கண்டனம்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிப்பது அநீதியானது என்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் (Pazha Nedumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் பாதகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறி நேற்றயை தினம்(14) விடுதலை புலிகளுக்கு எதிரான தடையை மத்திய அரசு நீடித்தது

அதன்படி, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புலிகளின் நோக்கம்
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது.அதற்குரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறித்துள்ளது.

“2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை.

அதற்கான ஆதரவு மற்றும் நிதித் திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயல்படுகிறது.

அனைத்துத் தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.”

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுவதின் மூலம் அதை மெய்யாக்கிவிடும் முயற்சியில் கடந்த காலங்களில் பதவியிலிருந்த இந்திய அரசுகளும், இப்போது பதவியில் இருக்கும் இந்திய அரசும் செயல்பட்டு வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதி மட்டுமே அடங்கிய தமிழீழ கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி போன்ற அறவழிப் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகளும், ஆயுதப் போராட்டம் நடத்திய போராளிகள் அமைப்புகளும் முன்வைத்தனவே தவிர, ஒருபோதும் இந்தியாவில் உள்ள எந்த பகுதியின் மீது அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.