ஐ.சி.சி. கூட்டங்களில் பி.சி.சி.ஐ. பிரதிநிதியாக சீனிவாசன் பங்கேற்க முடியாது: உச்ச நீதிமன்றம்

ஐ.சி.சி.யின் கூட்டங்களில் பி.சி.சி.ஐ.யின் பிரதிநிதியாக கலந்து கொள்ள யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்? மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் நிர்வாக குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என். சீனிவாசன், ஐ.சி.சி.கூட்டங்களில் பி.சி.சி.ஐ. பிரதிநிதியாக பங்கேற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி வரும் 24-ம்தேதி நடைபெற உள்ள ஐ.சி.சி. கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்றும், அவருடன் பி.சி.சி.ஐ. தலைமைச் செயல் அதிகாரியான ராகுல் ஜோரியும் பங்கேற்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்க தகுதியற்றவர்களை ஐ.சி.சி. கூட்டங்களில் பங்கேற்பதற்கு பரிந்துரைக்க முடியாது என்று கடந்த 10-ம்தேதி விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மந்திரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பி.சி.சி.ஐ. பொறுப்பு வகிக்க தடைவிதிப்பது உள்ளிட்ட லோதா கமிட்டியின் முக்கிய பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பு, சூதாட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பரிந்துரைகளை பாராளுமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.