பயிற்சியில் ஈடுபட்ட வெயின் பிராவோ: குஜராத் அணிக்காக விரைவில் திரும்புகிறார்?

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஏராளமான வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டார்கள். சில வீரர்கள் ஓய்வில் இருந்தார்கள். விராட் கோலி, உமேஷ் யாதவ், மொகமது ஷமி, ஜடேஜா போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. இவர் குஜராத் லயன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறையிலும் முத்திரை பதிக்கக்கூடியவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்றது. மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும்போது பிராவோவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதன்பிறகு கிரிக்கெட்டில் இடம்பெறாமல் இருந்தார். தற்போது பிராவோ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய முதல் பயிற்சி வீடியோவை டுவிட்டரில் பதிவேற்றம் செய்து ‘‘முதல் பயிற்சி சிறப்பாக அமைந்துள்ளது, விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதனால் பிராவோ குஜாராத் லயன்ஸ் அணியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணி, இந்த சீசனில் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பிராவோ அணிக்கு திரும்பினால் குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மேலும் வலிமைபெறும்.