பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்

பாலியல் தொல்லை சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள் அதில் இருந்து மீண்டு வரவும், இதுபற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தனியார் செய்தி சேனல் சார்பில் விளம்பர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு, பாலியல் சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினர், அதிகார வர்க்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், அவர்களை புறக்கணிக்க கூடாது என்று வலியுறுத்தினார்.

மேலும், இது தொடர்பாக அமிதாப்பச்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண், தன்னுடைய கண்ணியத்தை இழந்தால், அது நமது கலாசார மனநிலையில் வலுவாக பதிவாகி விடுகிறது. ஆனால், அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபருக்கு தான் வெட்கக்கேடே தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அல்ல.

பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பாதுகாப்பான, நம்பத்தகுந்த மற்றும் ஆதரவான சூழலை நாம் உருவாக்க வேண்டும். கதைகள் வாயிலாக இதுபற்றி பேசவும், இதனை முன்னெடுத்து செல்லவும் உறுதியான தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. மேலும், இது பொதுமக்களின் மனநிலையை மாற்றுவதற்கான தூண்டுகோலாய் அமையும்.

இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.