கட்டாய மொழி திணிப்பை தமிழகம் போர்குணத்துடன் எதிர்க்கும்: கொந்தளித்த தமிழச்சி-ஜோதிமணி

தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்கப் பார்த்தால் தமிழகம் போர்குணத்துடன் எதிர்க்கும் என்று தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசின் மும்மொழி கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி அல்ல. ஆனால் எந்த மொழியாவது நம் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டால் அதனை உறுதியுடனும், உத்வேகத்துடனும் எதிர்ப்போம்.

இருமொழிக் கொள்கையே நமது நிலைப்பாடு. ஹிந்தித் திணிப்பை தி.மு.க மிக உறுதியாக எதிர்க்கும்!’ என தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸின் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘தமிழக மக்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களாகிய நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம். எந்த ஒரு மொழியையும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்க நினைத்தால், தமிழகம் அதை போர்க்குணத்தோடு எதிர்க்கும். உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒருபோதும் செல்லுபடியாகாது’ என தெரிவித்துள்ளார்.