மக்களுக்கு பின்னால் ஒளிக்கும் த.தே.கூ! ஆனந்தன் எம்.பி விசனம்

மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பின்னால் ஒளிந்து நிற்கின்ற நிலையில், தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்களுக்காக வீதியில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஒரு கட்சி ஒரு கொள்கையை நோக்கியே மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டுமே ஒழிய, மக்களுக்கு பின்னால் ஒளித்து நிற்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு கூட்டமைப் பின் தலைவர் இரா. சம்பந்தன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுதலை செய்த நிலையில், தற்பொழுது உள்ள 120 அரசியல் கைதிகளை நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏன் விடுவிக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைமைகள் மிக மோசமாக பிற்போக்குத்தனமாக அரசாங்கத்திற்குப் பின்னால் நிற்பதாகவும் மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.