52 வயதிலும் அபாரமான கேட்ச்சை பிடித்த இலங்கை நட்சத்திர வீரர்!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் நேற்றைய போட்டியில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணியும் ஆசியா லயன்ஸ் அணியும் மோதின, குறித்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடந்துவருகிறது. குறித்த கிரிக்கெட் தொடர்பில் ஆசியா லயன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய ஆசியா லயன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 149 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் 150 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரான கெவின் பீட்டர்சன், தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், 38 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 86 ஓட்டங்களை கெவின் பீட்டர்சன் குவித்தார். பீட்டர்சனின் அதிரடி ஆட்டத்தால் 13வது ஓவரிலேயே 150 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

மேலும் குறித்த போட்டியின் போது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான 52 வயதான ஜெயசூரிய (Sanath Teran Jayasuriya) எதிரணி வீரர் ஹெர்ச்சல் கிப்ஸ் அடித்த கேட்ச்சை விழுந்து புரண்டு பிடித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.