மகிந்தவுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி! இது முடிவல்ல ஆரம்பம்!!!

நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இன்றைய தினம் அடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருக்கின்றது.

இதற்கமையவே நாட்டின் சட்டபூர்வமான பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்காக பிரதி அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு மனுஷ நாணயக்கார வந்திருப்பதாக குறிப்பிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன இது வெறும் ஆரம்பமே என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கமைய இலங்கையின் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவை நிராகரித்துவிட்டு மஹிந்த –மைத்ரி கூட்டணியிலிருந்து மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் படையெடுக்க உள்ளதாகவும் மருத்துவர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக அதிரடியாக நியமிக்கப்பட்டார். இந்த நியனம் அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானது என்று குற்றம்சாட்டிவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் ரணிலே நாட்டின் சட்டபூர்வமான பிரதமர் என்று சூளுரைத்து வருகின்றனர்.

அதேவேளை ஒக்டோபர் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.