அடிபணிய மறுப்பதாலேயே தமிழர்கள் படுகொலை!

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று, தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது.

செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர்.

தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக புதன் அன்று துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் பார்க்கச் சென்ற உறவினர்கள் மீது, பொலிசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ஒரு இளைஞர் பலியானார். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று, தூத்துக்குடி சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தெரிவித்துள்ளதாவது,

தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது.

தமிழ் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.