‘சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த சைபீரியன் புலி..!’

உணவு விஷயத்தில் மனிதர்களும் விலங்குகளும் ரிஸ்க் எடுக்க வேண்டும். ஏனெனில் பனிக் காடுகளில் உணவிற்கு வேறு வழியே இல்லை. மனிதன், விலங்கு என இரு  இனத்திற்கும் பிழைத்திருக்க வேட்டையாடுவது ஒன்றே வழி. அதிலும் குறுகி வரும் காடுகள், அழிக்கப்படும் காடுகளால் இரண்டு இனத்திற்கும் பிழைத்திருப்பது என்பதே சவாலான விஷயமாக இருக்கிறது. அதிலும் சைபீரியன் புலிகள் பிழைத்திருப்பது மிகப் பெரிய சவால்.

ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லையில் 600 மைல்களுக்கு மிகப் பெரிய காடு பறந்து விரிந்து கிடக்கிறது. அந்தக் காடுகளில் இருக்கிற மக்களுக்கு முக்கிய தொழிலே  வேட்டையாடுவதுதான். வனம் முழுவதும் பனி படர்ந்திருக்கிறது. பனிப் பிரதேசம் என்பதால் எப்போதும் பனிப் படர்ந்தே காணப்படும். இந்தக் காடுகளில் சைபீரியன் புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. வேட்டையாடுவது தொடர்ந்தாலும் சைபீரியன் புலிகள் தங்களின் இருப்பைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன. புலிகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், அதன் எண்ணிக்கையை உயர்த்தவும் அரசு “கான்ஃபிளிக்ட் டைகர்(Conflict Tiger)” என்கிற அமைப்பை  யூரி என்பவரின் தலைமையில் உருவாக்குகிறது. மனிதர்களுக்கும், புலிக்குமான மோதல்களைத் தவிர்ப்பதே இந்த அமைப்பின் பணி . சோபோலைன் என்கிற ஒரு கிராமம் இருக்கிறது.சைபீரியன் புலிகளை  வேட்டையாடுவதற்குச் சரியான இடமாக அது இருக்கிறது. பல இடங்களிலிருந்தும் வருகிற வேட்டைக்காரர்கள் இங்கிருந்த இடங்களில் தங்கி வேட்டையாடுகிறார்கள். அவர்களின் இலக்கு முழுவதும் சைபீரியன்  புலிகளை வேட்டையாடுவதுதான். சீனாவில் புலிகளுக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது. அதன் உடல் உறுப்புகள், தோல் என எல்லாமே பல ஆயிரம் டாலர்களில் விலை போகும். அதற்காகவே இங்கே தங்கி வேட்டையாடுகிறார்கள்.

செர்பியன் புலி

இவான் டுங்காய் என்கிற முதியவர் ஒருவர் காலம் காலமாக  அந்தக் கிராமத்தில் வசிக்கிறார். அவரின்  வாழ்க்கையில் பெரும்பகுதியை வேட்டையாடுவதிலேயே கழித்தவர். அவரைத் தவிர்த்து சிலர் வேட்டையாட அங்கே தங்கியிருக்கிறார்கள்.  அங்கு மார்கோவ் என்கிறவர் புலிகளை வேட்டையாட வருகிறார். முதியவர்  டுங்காய்  தனக்கு சொந்தமான ஒரு வீட்டை மார்க்கோவ் தங்கிக் கொள்ளத் தருகிறார். விலங்குகளால் இந்தப் பகுதியில் ஆபத்து இருப்பதாகவும், குறிப்பாகப் புலிகள் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கிறார். ஒரு வேலைப் புலியை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் அதைத் தாக்க வேண்டும். இல்லையெனில் உயிர் போக வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார். புலிகளின் கால்தடத்தை தொடர்ந்து சென்று அதை வேட்டையாடுவது எளிதான காரியம், ஆனால் பனி பிரதேசங்களில் புலியின் காலடியைத் தொடர்ந்து செல்லும் பொழுது  புலி பதுங்கியிருந்து தாக்க வாய்ப்பிருக்கிறது.

சில நாட்களில் மார்க்கோவ் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குள் செல்கிறார். ஓரிடத்தில் உறுமல் சத்தம் வரத் துப்பாக்கியை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு சத்தம் வந்த இடத்தை உற்றுப் பார்க்கிறார். சுமார் 3 மீட்டர் நீளத்தில் ஒரு ஆண் புலி வருவதை மார்க்கோவ் பார்க்கிறார். மார்க்கோவ் மட்டும் புலியைப் பார்த்திருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது புலியும் மார்கோவை பார்த்துவிட்டது.  உறுமிக் கொண்டே படர்ந்திருந்த பனி படலத்தை கிழித்துக் கொண்டு புலி மார்கோவை நோக்கிப்  பாய்ந்து வருகிறது. வேறு வழியின்றி மார்க்கோவ் புலியை நோக்கிச் சுடுகிறார். குண்டு புலியைத் தாக்கியதை உணர்ந்த மார்க்கோவ் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து விடுகிறார். புலியைப் பற்றிய பயம் அவரின் உடல் முழுமைக்கும் தொற்றிக் கொள்கிறது.

பயத்தில் அன்றைய இரவு கழிந்தது. விடியற்காலையில் வீட்டிலிருந்து மார்க்கோவ் வெளியே வருகிறார். சில நொடிகளில் விசித்திரமான சத்தம் கேட்பதை உணர்கிற மார்க்கோவ் ஒரு வித பயத்துடனே சுற்றிப்  பார்க்கிறார். இப்போது சத்தம் அதிகமாக  வருகிறது. புலியினுடைய உறுமல் சத்தம் என்பதை உறுதி செய்கிற மார்க்கோவ் நொடியும் தாமதிக்காமல் வீட்டிற்குள் ஓடி துப்பாக்கியை எடுத்து தோட்டாக்களை  நிரப்புகிறார். மார்க்கோவ் சுட்டதில் காயம்பட்ட புலி எப்படியோ தப்பித்துவிட்டது. மார்கோவின் காலடித் தடத்தை பின்தொடர்ந்து அவரது வீட்டிற்கே வந்துவிட்டது. மார்க்கோவ் வீட்டின் ஜன்னலில் இருந்து புலியின் நடவடிக்கையைக் கவனிக்கிறார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு புலி மார்கோவ்  வீட்டிற்கு முன்னாள் நின்று உறுமுகிறது. மார்க்கோவ்  புலியின் அச்சுறுத்தலில் பயந்து போகிறார். புலி இப்போது அவரது வீட்டிற்குப் பக்கத்தில் வந்து விடுகிறது. பயத்தில் துப்பாக்கியால் பல முறை வீட்டிற்கு வெளியே சுடுகிறார். துப்பாக்கி சத்தத்தில் மிரண்டு போகிற புலி அங்கிருந்து கிளம்பிவிடுகிறது. புலி கிளம்பியதை உறுதிசெய்த மார்க்கோவ் இனியும் இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்கிற மார்க்கோவ் தனக்கு இருப்பிடம் கொடுத்த டுங்காய் வீட்டிற்குக் கிளம்புகிறார்.

புலி                                                                                                Photo : shasasnow

மார்க்கோவ் முதல் முறை டுங்காயைச் சந்திக்கும் போதே ஒரு விஷயத்தைக் கூறியிருந்தார். ‘உன்னுடைய உயிருக்கு நீயே  பொறுப்பு. ஒரு வேலை சைபீரியன்  புலியால் உனக்கு ஆபத்து நேர்ந்தால்  என்னைத் தேடி வர வேண்டாம். உன் காலடியை பின் தொடர்ந்து புலி வந்து விடும்’ என்று எச்சரித்திருந்தார். ஆனால் மார்க்கோவ் பொறுமையாக இருப்பதாக இல்லை. பத்தடி தூரத்தில் புலியைப்  பார்த்ததும் பயந்து டுங்காய் இருக்கிற இடத்திற்கு வந்துவிடுகிறார்.  “இதற்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. காலைல வீட்டுக்கே புலி வந்துருச்சு. பத்து மீட்டர் பக்கத்துல புலிய பாத்ததும் உயிரே இல்ல இனி என்னால இங்க இருக்க முடியாது நான் போகிறேன்”  என்கிறார். ஆனால் டுங்காய் “இந்த நேரத்தில் நீ இங்கிருந்து போவது நல்லதல்ல, விடியும் வரை இருந்து விட்டு காலையில் போ” என்கிறார். பயத்தின் உச்சத்தில் இருந்த மார்கோ “இங்க இருந்த நா செத்துருவேன். நீ இங்கயே இருந்து சாவு” என்று சொல்லிவிட்டு  அவரது பேச்சைக் கேட்காமல் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

அடுத்த நாள் காலை புலி தாக்கி ஒருவர்  இறந்து போனதாக புலி வேட்டைத் தடுப்புக் குழுவின் தலைவர் யூரிக்கு தகவல் வருகிறது. அவர் தன்னுடைய குழுவை அழைத்துக் கொண்டு இறந்தவரின் உடலைத் தேடி காட்டுக்குள்  கிளம்புகிறார்கள். காட்டில் புலியினுடைய கால் தடம் தென்படுகிறது. குழுவிலிருந்து மோப்ப நாய் கிட்டி, புலியின்  காலடி தடத்தைப் பின் தொடர்ந்து செல்கிறது. ஓரிடத்தில் புலி ஒருவரை வேட்டையாடிக் கொன்றிருப்பதற்கான தடயம் கிடைக்கிறது. ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை. குழு தன்னுடைய தேடுதலைத் தீவிரமாக மேற்கொள்கிறது. காட்டின் ஓரிடத்தில் இறந்து போன ஒரு மனித உடல் கிடக்கிறது. உடலின் எல்லாப் பாகங்களும் விலங்குகளால் உண்ணப்பட்டு கால் பகுதி மட்டுமே கிடைக்கிறது. அதை மீட்டு எடுத்துக்கொண்டு குழு திரும்பிவிடுகிறது. விசாரணையில் இறந்து போனது மார்க்கோவ் என உறுதி செய்யப்படுகிறது.

கிராமத்தில் இருக்கிறவர்களை  எச்சரிக்கையாய் இருக்கும்படி யூரி சொல்கிறார். அடுத்த ஒரு வாரம் கழித்து புலியின் நடமாட்டம் இருப்பதை அதன் காலடி தடம் கொண்டு மக்கள் உறுதி செய்கிறார்கள். அந்த வாரத்தின் இறுதியில் ராணுவத்தில் பணிபுரிகிற ஆண்ட்ரு என்பவர்  விடுமுறைக்கு அவருடைய கிராமத்திற்கு வருகிறார். கிராமத்தில் எல்லோரும்  ஆண்ட்ருவை  வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், புலியால் ஆபத்து இருக்கிறதென எச்சரிக்கிறார்கள். ஆனால் ராணுவ வீரர் “புலியைப்  பார்த்து எனக்குப் பயமில்லை” என்று சொல்லிவிட்டு கையில் துப்பாக்கியோடு  காட்டுக்குள் நுழைகிறார். பனிப் படர்ந்தக் காட்டுக்குள் புலியை எதிர்பார்த்து முன்நோக்கி நடக்கிறார். உண்மையில் புலியை எதிர்கொள்ள மனித உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். இது வரை யாரும் புலியை நேருக்கு நேர் சந்தித்து உயிரோடு திரும்பியதில்லை என்கிற மோசமான வரலாறு இப்போதும் இருக்கிறது. ஆனால் ராணுவ வீரர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் புலியை தேடிச் செல்கிறார். சில தூரங்கள் சென்றதும் அவர் இது வரை கேட்காத ஒரு வித்தியாசமான சத்தம் ஒன்றை கேட்கிறார். ஆனால் அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அவரால் யூகிக்க முடியவில்லை. சில நொடிகளில் புலி அவர் மீது பாய்ந்து விடுகிறது. அவருக்கு என்ன ஆனது என்கிற விஷயம் கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. இரண்டாவது இறப்பு சம்பவமும் நடந்தேறியது. ராணுவ வீரனின் இழப்பு ஊர் மக்களை இன்னும் பீதிக்குள்ளாக்குகிறது.  உணவு, தண்ணீர் என அளவுக்கு அதிகமாக வீடுகளில் சேமித்து வைக்க ஆரம்பிக்கிறார்கள். யாரும் வெளியே வராமல் இருக்கிறார்கள்.

காண்ப்ளிக்ட் யூனிட்

ராணுவ வீரர் இறந்த தகவல் புலி வேட்டைத் தடுப்புக் குழுவுக்குக் கிடைக்கிறது. அவர்கள் வாகனத்தில் மீண்டும்  பனிக்காடுகளுக்குள் செல்கிறார்கள். குழுவில் இருக்கிற மோப்ப நாய் கிட்டி புலியின் தடயத்தைப் பின் தொடர்ந்து செல்கிறது. குழுவிலுள்ள நான்கு பேரும்  துப்பாக்கியோடு பின் தொடர்கிறார்கள். ஏற்கனவே இறந்து போன மார்கோவின் உடலை எப்படித் தேடினார்களோ அப்படியே இரண்டாவதாக இறந்து போன ராணுவ வீரரின் உடலைத் தேடுகிறார்கள். ஓரிடத்தில் மோப்ப நாய் ராணுவ வீரனின் உடையைக் கண்டுபிடித்து குரைக்க ஆரம்பிக்கிறது. மார்கோவின் உடலில் கால்களையாவது குழுவால் மீட்க முடிந்தது. ஆனால் ராணுவ வீரன் உடலில் ஒரு பாகத்தை கூட மீட்க முடியாமல் போகிறது. அவரின் உடையைத் தவிர மொத்த உடலையும் புலி சாப்பிட்டிருந்தது. மொத்த குழுவும் அதிர்ந்து போகிறார்கள். ஏனெனில் புலி மனிதர்களை உண்ண ஆரம்பித்துவிட்டால் அதையே திரும்ப செய்யும் குணமுடையது எனக் குழுவின் தலைவரான யூரி சொல்கிறார். இதற்கு முன்பு நடந்த புலித் தாக்குதல் குறித்த தகவலைக் குழு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால் புலியைக் குறைத்து மதிப்பிட்டார்கள். இன்னொரு உயிர்ப் பலி நடந்துவிடக் கூடாது உடனடியாக புலியை பிடித்தாக வேண்டுமென குழு உறுப்பினர்கள் முடிவெடுக்கிறார்கள்.

ராணுவ வீரரின் உடை மற்றும் தடயங்கள் கிடைத்த இடத்திலிருந்து புலி தேடலைத் தொடங்குகிறார்கள். புலி கடந்து போன பாதையை அதன் காலடிதடங்களைக் கொண்டு பின் தொடர்கிறார்கள். அப்போது புலியின் காலடித் தடத்தில் இருக்கிற ஒரு வித்தியாசத்தை யூரி கண்டுபிடிக்கிறார். புலி கடந்த பாதையில் புலியின் மூன்று கால்களின் தடம் மட்டுமே தென்படுகிறது. அப்படியெனில் புலியின் ஒரு காலில் காயமிருக்கலாம் என யூகிக்கிறார்கள். புலி பொதுவாக தன்னுடைய எல்லையில் சுமார் 100 கிலோ மீட்டர்கள் பயணிக்கும். ஆனால் புலியின் ஒரு கால் காயம்பட்டிருப்பதால் புலியால் அதிக தூரம் சென்றிருக்க முடியாது என்பதை உணர்ந்து எல்லோரும் எச்சரிக்கையுடன் புலியை தேடுகிறார்கள். யூரி மற்றும் குழு பின் தொடர அவர்களுக்கு முன் 40 மீட்டர் முன்னால் கிட்டி மோப்ப நாய் செல்கிறது. திடீரென முன்னாள் சென்ற மோப்ப நாய் மெல்லிய சத்தத்துடன்  பின் வாங்குகிறது. நாயின் உடல் மொழியில் பதற்றம் இருப்பதை அறிகிற குழு அதே இடத்தில் நின்று சூழ்நிலையை கவனிக்கிறார்கள். புலி அவர்களுக்கு அருகில் இருப்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ஒட்டு மொத்த குழுவுக்கும் இப்போது புலி குறித்த பயம் முகத்தில் தெரிய ஆரம்பிக்கிறது. யூரி புலியின் உறுமல் சத்தத்தை தெளிவாகக் கேட்கிறார். அந்த இடம் அமைதியாக இருக்கப் புலியின் சத்தம் மட்டும் தெளிவாக கேட்கிறது. பதுங்கியிருந்த புலி முன்னால் இருந்த யூரியின் மீது பாய்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் புலியை நோக்கி கண்ணை மூடிக் கொண்டு சுடுகிறார். சில நொடிகளில் சுதாரித்து எழுகிற யூரி தான் உயிரோடு இருப்பதை உணர்கிறார். அவருக்கு முன்னாள் 10 மீட்டர்கள் தள்ளி புலி அவரது துப்பாக்கியை வாயில் கவ்வியபடி கிடக்கிறது.

புலியைப் பார்த்ததும் யூரி மட்டுமல்லாது ஒட்டு மொத்த குழுவும் புலியைச் சுட்டிருக்கிறார்கள். கீழே விழுந்த யூரியை குழு நண்பர்கள் தூக்குகிறார்கள். அவரது கழுத்தில் புலி நகம் பதிந்திருந்தது. குண்டு பாய்ந்ததால் புலி உயிருக்குப் போரடிக்க கொண்டிருந்தது. புலியின் உடலை யூரி சோதனை செய்கிறார். அதன் வலது காலில் ஒரு காயம் இருப்பதைக் கண்டு பிடிக்கிறார். ஒரு காலில் காயம் இருப்பதால் புலியால் காட்டு மிருகங்களைத் தாக்கி வேட்டையாட முடியாது. அதனால் தான் எளிதாக கொல்லக்  கூடிய மனிதர்களைப் புலி தாக்கியது என்பதை உணர்கிறார்கள். புலியின் உடலிலிருந்து குண்டுகளை சம்பவ இடத்திலேயே வெளியே எடுக்கிறார்கள். குழு பயன்படுத்திய தோட்டாக்கள் தவிர்த்து மேலும் இரண்டு குண்டுகளை புலியின் உடலிலிருந்து எடுக்கிறார்கள். அதில் ஒன்று மார்க்கோவ் புலியிடமிருந்து தப்பிக்க முதல் முறை சுட்டது. பின்னர் புலியை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். சம்பவம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து ஊருக்குள் புகுந்து நாய்களை ஒரு புலி தூக்கிச் சென்றது. நிம்மதியில் இருந்த மக்கள் மீண்டும் பயத்திற்குள்ளாகிறார்கள். யூரி மற்றும் அவரது குழு மீண்டும் இன்னொரு புலியை  தேடி காட்டுக்குள் செல்கிறார்கள். இதுவரை பார்த்த ஒட்டு மொத்த காட்சியையும் அந்த ஒரு காட்சி உடைத்து நொறுக்கியது. ஒரு வயதேயான இரண்டு ஆண்  புலி குட்டிகள் இறந்து போய் பணியில் உறைந்து போய் கிடந்தன. உணவில்லாமல் இரண்டு குட்டிகளும் இருந்திருப்பது தெரியவந்தது. மனிதர்களைக் கொன்ற புலி தன்னுடைய குட்டிகளுக்கு உடல்களை உணவாகக் கொடுத்திருப்பது தெரியவந்தது.  இறந்த குட்டிகளின் உடலைச் சுமந்து கொண்டு மொத்த குழுவும் திரும்பி வந்தது. வேட்டையாட வந்தவர்களை வேட்டையாடிய புலியை, வேட்டையாடிக் கொன்றதை அடிப்படையாக வைத்து ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசும் வென்றிருக்கிறது. இன்றைய உலகில் புலியை  கொல்வது கடினமான விஷயமல்ல, அவற்றைப் பாதுகாப்பதே கடினமாக இருக்கிறது.