தமிழர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை உலகம் அறியும்: நரேந்திர மோடி

தமிழர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை உலகம் அறியும், தமிழ் மண்ணில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்குவதில் பெருமையடைகிறேன் என பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் திகதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது ‘காலை வணக்கம்’ என தமிழில் பேசி உரையைத் தொடங்கினார். மேலும், முதல் முறையாக தமிழ்நாட்டில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது.

சோழர்கள் ஆண்ட பகுதியில் இந்த அளவிற்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இதில் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு, 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

இது வரலாற்று சிறப்பு மிக்க கண்காட்சியாகும், தமிழர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை உலகம் அறியும்.

இந்த பெருமைக்குரிய தமிழ் மண்ணில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று பேசினார்.

காந்தி பிறந்த இந்த மண் உலகிற்கு அஹிம்சையை போதித்த நாடு, அமைதியை விரும்பும் அதே நேரத்தில் நாட்டு மக்களுக்கு எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தனது பங்களிப்பை சிறப்பாக வழங்குகிறது.

தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி இந்திய ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது.

ஆகவே தான் இந்தியா முதன்முறையாக ராணுவ தளவாடங்கள் தயாரித்து சாதனைப் படைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.