யாழ்.சிறை வளாகத்தில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் இரகசியமாக அழிப்பு?

யாழ். சிறைச்சாலை வளாகத்தில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்ற போதிலும் அவை இரகசியமான முறையில் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தின் முன்னாள் பொலிசாரின் விடுதிக் கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக கடந்த ஒரு மாதமாகப் பணிகள் இடம்பெறுகின்றன.

இதன்போதே கடந்த வாரம் குறித்த நிலம் தோண்டப்பட்டது. இதன்போதும் நான்கு எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பிலோ அல்லது அவற்றுடன் காணப்பட்ட தடயப்பொருட்களையோ உரிய முறைப்படி பொலிசாருக்கோ அல்லது நீதிமன்றிற்கோ தெரியப்படுத்தாது அந்த இடத்தில் இருந்து வாகனங்கள்மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அப்புறப்படுத்துவதற்கு முன்னர் அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் அதிகாரிகளிற்குத் தெரியப்படுத்தப்பட்டபோதும், எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக அந்த இடத்தில் இருந்து தடயப் பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று சிறைச்சாலையின் பின்புறத்தில் அண்மையில் ஓர் சிறிய கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் இருந்தும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு அவையும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்ற நிலையில் தற்போது முன்னால் தோண்டப்பட்ட குழியில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியானது கடந்த 1996 முதல் 2002வரையில் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.