ஜெ. நினைவிடத்தில் பட்ஜெட் உரையை வைத்து அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் ஜெயகுமார்!

தமிழக சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சாமானிய மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று முதல் முறையாக தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது அமைச்சர் ஜெயகுமாருக்கும் இதுவே முதல் முறையாகும்.

இதைத்தொடர்ந்து சட்டசபைக்கும் செல்லும் முன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற அமைச்சர் ஜெயகுமார் அங்கு பட்ஜெட் உரையை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிதிநிலை அறிக்கையை ஜெ நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றதாக கூறினார்.

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க முன்னோடி திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதா வழியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சாமானிய மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார்.

ஜெயலலிதாவின் பொன்மொழியின்படி எவ்வளவு நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் ஏழை எளிய மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை ஏற்படாது என்றும் அவர் கூறினார்.