எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமே தவறு: துரைமுருகன் பொளேர்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் முன்வைத்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமே தவறு என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சாடியுள்ளார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த கோரியது திமுக. ஆனால் சபாநாயகர் இதனை நிராகரித்தார்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டம்
அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

துரைமுருகன்
திருச்சி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீர்மானத்தில் தவறு

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானமே தவறு. அந்த தீர்மானத்தில் அமைச்சரவை மீது இந்த மாமன்றம் நம்பிக்கை கோருகிறது என்று முன்மொழியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அமைச்சரவை மீது இந்த மாமன்றம் நம்பிக்கை வைத்திருப்பதைத் தெரிவிக்கிறது என்று முன்மொழியப்பட்டது. இது அடிப்படையில் தவறானது.

ரகசிய வாக்கெடுப்பு
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது விருப்பத்துக்கு மாறாக பிணைக் கைதிகளைப் போல கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக இருக்க அனுமதித்த பிறகுதான் வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். இதைத்தான் சட்டசபையில் நாங்கள் வலியுறுத்தினோம். அதேநேரத்தில் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் எனில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதையே சட்டசபையில் வலியுறுத்தினோம்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.