சசிகலாவுக்காக போயஸ் கார்டன் ஜெ. பங்களாவையே சிறையாக்குகிறது தமிழக அரசு?

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழகத்துக்கு மாற்றுவதில் தீவிரமாக இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தமிழகத்துக்கு மாற்றப்படும் சசிகலாவை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா பங்களாவையே சிறையாக மாற்றி தங்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளி; அவர் காலமாகிவிட்டதால் அவர் விடுவிக்கப்படுகிறார்; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்டோர் சரணடைந்தனர்.

சு.சுவாமி குரல்
தற்போது பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா உள்ளிட்டோரை தமிழகத்துக்கு மாற்றும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இதற்காக முதல் குரல் கொடுத்திருக்கிறார்.

போயஸ் பங்களாவில்…

அப்படி தமிழகத்துக்கு மாற்றப்படும் சசிகலாவை புழல் சிறையில் அடைக்காமல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா பங்களாவையே சிறையாக மாற்றி அங்கேயே தங்க வைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறதாம். இதற்கான சட்ட ஆலோசனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தில் இடமிருக்கிறதாம்
ஆனால் உச்சநீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் சசிகலாவை உடனே தமிழகத்துக்கு மாற்றிவிட முடியாது என மூத்த வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசும் கர்நாடக அரசும் இணைந்து முடிவெடுத்து சசிகலாவை சிறை மாற்ற செய்யவும் சட்டத்தில் இடமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடும் எதிர்ப்பு வரும்
சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை ஒட்டுமொத்த தமிழக மக்களும் நிராகரித்து வருகின்றனர். அவரது வழிகாட்டுதலில் அமைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் சசிகலாவை ஜெயலலிதாவின் பங்களாவிலே சிறை வைக்கிறோம் என்கிற நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மேற்கொண்டால் நிச்சயம் கடும் எதிர்ப்புகள் உருவாகவே செய்யும்.