தொழில்முறை குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் அபார வெற்றி!

தொழில்முறை குத்துச்சண்டையில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் சாம்பின்ஷிப் பட்டத்தை வசப்படுத்திய இந்திய வீரர் விஜேந்தர்சிங், நேற்று முன்னாள் உலக சாம்பியன் பிரான்சிஸ் செகாவுடன் (தான்சானியா) டெல்லியில் மோதினார். இது 10 ரவுண்ட் கொண்ட போட்டியாகும். ‘நான் விடும் அசுர வேக குத்தில் இனி விஜேந்தர் தொழில்முறை குத்துச்சண்டையை நினைத்து கூட பார்க்கமாட்டார்’ என்று சவடால் விடுத்த பிரான்சிஸ் செகா, விஜேந்தரின் தாக்குதலில் விழிபிதுங்கினார்.

தொடக்கத்தில் தடுப்பாட்ட பாணியை கடைபிடித்த விஜேந்தர்சிங் அதன் பிறகு பிரான்சிஸ் செகா மீது சரமாரி குத்துகளை விட்டார். இதில் 3-வது ரவுண்டிலேயே பிரான்சிஸ் செகா நாக்-அவுட் செய்யப்பட்டு, தொழில்நுட்ப புள்ளி அடிப்படையில் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். 10 நிமிடத்திற்குள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொழில்முறை குத்துச்சண்டையில் தோல்வியே சந்திக்காத 31 வயதான விஜேந்தர்சிங் இதன் மூலம் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.