ஒருநாள் போட்டி அணிக்கு டோனியே கேப்டனாக நீடிக்க வேண்டும்: கபில்தேவ் கருத்து!

வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இலங்கை வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தை ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ்கிறது.

இந்திய ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணிக்கு டோனி கேப்டனாக உள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் போட்டி அணிக்கும் வீராட்கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பேச்சுக்கள் எழுந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஒரு நாள் போட்டிக்கு டோனியே நீடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-

டோனி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அதுதான் முக்கியம். அவர் அனுபவம் வாய்ந்த வீரர். அவரே ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாக நீடிக்க வேண்டும். நேரம் வரும் போது டோனியே அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்.

கேப்டன் பதவியில் டோனி, கோலி இருவரையும் ஒப்பிட முடியாது. டோனி அமைதியானவர். கோலி ஆக்ரோ‌ஷமானவர். இரு வரையும் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் கடினம் என நினைக்கிறேன். ஏனென்றால் இருவரும் வேறு விதமான அணியையும், செயல்பாடுகளையும் கொண்டுள்ளனர்.

நாளை நீங்கள் டோனி, கோலி ஆகியோரை சவுரங் கங்குலியுடன் ஒப்பிட்டு சொல்லுங்கள் என்று கேட்பீர்கள். ஒவ்வொரு கேப்டனும் தங்களிடம் உள்ள ஆக்ரோ‌ஷம், ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை வேறு வேறு விதமாக வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் இவை அனைத்தும் அணியின் வெற்றிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதுதான் முக்கியம் அதுதான் கேப்டன்ஷிப்.

வேகப்பந்து வீச்சாளர்கள் 135 கி.மீட்டர் வேகத்தில் வீசினாலும் சரியான அளவில் வீச்சு தான். 140 கி.மீட்டர் வேகத்தில்தான் வீச வேண்டும் என்பதில்லை. முகமது சமி, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார் ஆகியோர் நல்ல முன்னேற்றத்துடன் இருக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.