இளைஞரின் அதிர்ச்சி மரணம்… ரயிலில் தப்பிய கொலையாளி!

தமிழகத்தின் சென்னையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ரயிலில் தப்பிச் சென்ற கொலையாளியை பொலிசார் விமானத்தில் பறந்து சென்று மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் ஒடிசாவைச் சேர்ந்த யசோபந்தா மஜி (37) மற்றும் ஜெகநாத் ரவுத் (41) உட்பட நான்கு நண்பர்கள் எஸ்பிஐ வங்கியில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக சென்னையில் உள்ள கிண்டி பாரதி நகரில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இவர்களில் ஜெகநாத் ரவுத் நேற்று முன் தினம் இரவு அதிகமாகக் குடித்துவிட்டு அறைக்கு வந்துள்ளார். அப்போது அறையில் யசோபந்தா மஜி மட்டும் இருந்துள்ளார்.

அவர் போதையில் யசோபந்தா மஜியைச் சீண்டி தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் யசோபந்தா மஜி கோபமடைந்த நிலையில் போதையில் இருந்த ஜெகநாத் ரவூத்தைத் தாக்கியுள்ளார்.

அதில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் யசோபந்தா மஜி கோபமாக வெளியேறியுள்ளார். சிறிது நேரம் கழித்து மற்ற இரு நண்பர்கள் அறைக்குத் திரும்பியுள்ளனர்.

அறையில் ஜெகநாத் ரவுத் பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜெகநாத் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சந்தேக மரணம் என்பதால் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஜெகநாத்தின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் அவரது விலா எலும்புகள் நொறுங்கியதால் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்தது.

இதுதொடர்பாக கிண்டி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் யசோபந்தா மஜி கோபத்தில் விலா எலும்புகளில் மிதித்தது தெரியவந்தது.

ஜெகநாத் உயிரிழந்ததை அறிந்து அச்சத்தில் அவர் ஒடிசா தப்பிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதையறிந்த கிண்டி பொலிசார் யசோபந்தா மஜி ரயிலில் ஒடிசா போவதற்குள் விமானத்தில் சென்று ஒடிசா ரயில் நிலையத்திலேயே அவரை எதிர்கொண்டு மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக அவரை ஒடிசா பொலிசாரின் உதவியுடன் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.