ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ் மகன்.. நேற்று இரவு டெல்லியில் நடந்தது என்ன..?

பிரதமர் மோடி நேற்று மாலை அவரது இல்லத்தில் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் அழைக்கப்பட்டிருந்தார்.

புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டதால் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் பதவி கிடைக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார். மற்ற 37 பேரும் படுதோல்வி அடைந்தனர்.

கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆர்வம் காட்டின.

தமிழகத்திலும், பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற ஆர்வம் காட்டினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திரநாத் குமாரை “மத்திய அமைச்சரே” என்று புகழ்ந்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் கூட அடித்து ஒட்டியிருந்தார்.

ஆனால் ஓபிஎஸ் மகனுக்கு நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் எதிர் பார்த்து காத்திருந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.