உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகளை ஏமாற்றி 8 வருடங்களாக குடும்பம் நடந்திய வந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் சோம்லா என்பவர் கடந்த 1994ம் ஆண்டு, பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
திருமணத்தின் போது ரூ.50 லட்சம் வரதட்சணையாகவும், தொழில் துவங்க பணம் தேவை எனக்கூறி ரூ.37 லட்சமும் வாங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
பின்னர் 2011ம் ஆண்டு தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை காதலித்தது திருமணம் செய்துள்ளார். அவரிடமும் பல்வேறு காரணங்களை கூறி, ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளை பெற்று அடகு வைத்துள்ளார்.
இவ்வளவு பணத்தையும் கணவர் என்ன செய்தார் என்பது குறித்து இரண்டு மனைவிகளுமே கேட்காமல் இருந்துள்ளனர். இருவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், வாரத்தில் முதல் மனைவியுடன் மூன்று நாள், இரண்டாவது மனைவியுடன் நான்கு நாட்கள் என வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவரின் திருமண விழாவிற்கு தன்னுடைய இரண்டு மனைவிகளுடனும் ராகுல் சோம்லா சென்றுள்ளார்.
நிகழ்ச்சியில் இருவரையும் ஒருவருக்கொருவர் அறியாத வகையில் பங்கேற்க வைத்துள்ளார். அந்த சமயத்தில் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த முதல் மனைவி, கணவனுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் பொலிஸார் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த இரண்டாவது மனைவி, ராகுல் சோம்லாவின் பித்தலாட்டத்தை கண்டுபிடித்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய கணவர் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராகுல் சோம்லா மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






