வரிக்குதிரைகளுக்கு வரிகள் இருப்பதேன்?… கண்டறிந்த விஞ்ஞானிகள்

நம்மில் பலரிடம் `பார்க்க அழகாக இருக்கும் சில விலங்குகளை நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னால் வரிக்குதிரையின் ஒரு விலங்காக நினைக்காமல் இருக்கமாட்டோம்.

இவற்றின் தோற்ற ஈர்ப்புக்கு முக்கியக் காரணம் இதன் கறுப்பு வெள்ளை வரிகள்தாம். ஆனால், இந்தக் குதிரை இனத்திற்கு மட்டும் ஏன் இந்த வரிகள் வந்தன என்பது புரியாத புதிராகவே இருந்து வந்திருக்கிறது.

இதற்கு பல்வேறு காரணிகளை ஒவ்வொருவரும் கூறிவந்தனர். ஆனால், இப்போது இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.

வரிக்குதிரை

ஆப்பிரிக்கக் குதிரைகளின் ரத்தம் குடிக்கும் ஈ வகையிடம் (Horse Fly) இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவே பரிணாம வளர்ச்சியில் இந்த வரிகள் இந்தக் குதிரைகளுக்கு வந்திருக்கும் எனத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

புதிய ஆராய்ச்சி ஒன்றில் வரிகள் இல்லாமல் ஒரே நிறத்தில் இருக்கும் தோலின்மீது இந்த ஈக்கள் எளிதில் உட்கார்ந்துவிடுவதும் வரிகள் இருக்கும் இவற்றின் தோலில் குழம்பி உட்காரமுடியாமல் தவிப்பதும் தெரியவந்துள்ளது.

சில தோலில் மோதித் திரும்பி வந்துவிடுகின்றன. சாதாரண குதிரையின்மீது வரிகளுடைய தோலை போர்த்தியும் இது சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. அடிக்கடி தனது வாலை ஆட்டுவதன் மூலம் இதைத்தாண்டியும் மேலே உட்காரும் ஈக்களை விரட்டிவிடுகின்றன வரிக்குதிரைகள்.

வரிக்குதிரை

இதற்குமுன் இருந்த வாதங்கள் எதற்கும் போதிய விளக்கங்கள் இல்லாமலும் முரண்கள் இருப்பதாலும் இதுதான் உண்மை காரணமாக இருக்கவேண்டும் என நம்புகின்றனர் இவர்கள்.

இந்த ஈக்கள் அவ்வப்போது கொடிய நோய்களைப் பரப்பி குதிரைகளைக் கொல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரிக்குதிரையின் வரிகளைச் சுற்றியிருந்த மர்மம் இறுதியாக இப்போது நீங்கியுள்ளதாக நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.