வாழ்வுரிமை கட்சி பிரமுகர் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி..!

பாசமாக வளர்த்த நாயை விரட்டி விட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொலிஸ் நிலைய வாசலில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார். இவருடைய மனைவி சாதனா. திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன இவர்கள், திருப்பூர் சொர்ணபுரி லே அவுட் பகுதியில், தியாகராஜன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இந்நிலையில், சதீஷ்குமாருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தியாகராஜன் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து வீட்டை காலி செய்த சதீஷ்குமார், கொஞ்சம் பொருட்களையும் பாசமாக வளர்த்த நாயையும் அங்கேயே விட்டுவிட்டு, பின்னர் வந்து எடுத்துச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், மீதம் உள்ள பொருட்களை எடுத்துவர தியாகராஜன் வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார், அங்கு தனது நாய் இல்லாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, வீட்டின் உரிமையாளர் தியாகராஜன் நாயை அடித்து விரட்டி விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து சதீஷ்குமார், தனது நாயை கண்டுபிடித்து தருவதுடன், தியாகராஜன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலம்பாளையம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், “காணாமல் போன நாயை கண்டுபிடிப்பது எங்கள் வேலை இல்லை” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த சதீஷும் சாதனாவும், வீட்டிற்கு சென்று மண்ணெண்ணெய்  எடுத்து வந்து, பொலிஸ் நிலைய வாசலில் வைத்து தங்கள் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிஸார், உடனடியாக சதீஷ் மற்றும் சாதனாவை தடுத்து, அவர்களிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்ததுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் காரணமாக பொலிஸ் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.