ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) காலை ஜனாதிபதி தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இடம்பெற்றது.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோற்றுவதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும் அதிகாரிகளுக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் தனித்தனியாக பணியாற்ற முடியாது என்றும், அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இங்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மக்களுக்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், கல்வி, காணி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
உபகரணங்கள் மற்றும் மனித வளங்களின் பற்றாக்குறை, டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பாக சில தரப்பினர் காட்டும் பிற்போக்கான தன்மை போன்று பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் காட்டு யானைகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் கீழ்மட்டம் வரை செல்வதில் காணப்படும் தாமதம் குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டதோடு தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், ஒவ்வொரு காலாண்டிலும் எதிர்பார்க்கப்படும் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றத்தை அடைவதில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேற்படி திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.
அதன்படி, கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதோடு 2025 நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை திறமையாகவும் செயற்திறனுடனும் பயன்படுத்தவும், எதிர்பார்க்கப்படும் நிதி மற்றும் பௌதீக இலக்குகளை அடையவும் துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.