ஐயப்பனை தரிசித்த 2 பெண்களும் வீடு திரும்ப முடியாமல் தவிப்பு!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதற்கு பல இந்து அமைப்புகளும், பா. ஜனதா கட்சியினரும் மற்றும் ஐயப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் யாரும் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.

இப்போராட்டத்தை மீறி கடந்த 2-ந்தேதி கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

பிந்து, கனகதுர்கா இருவரும் சபரிமலையில் தரிசனம் செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள், பா.ஜனதா கட்சி இணைந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரங்கள் நடந்தது.

கேரளாவில் நடந்த வன்முறை காரணமாக சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா இருவரும் காவல் துறையினரின் துணையுடன் தலைமறைவானார்கள். இவர்களை தேடி அலைந்த போராட்டக்காரர்கள் கேரளாவில் உள்ள பிந்து, கனகதுர்கா வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.

மேலும் பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளா வந்தால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தலைமறைவான பிந்து, கனகதுர்கா இருவரும் இதுவரை சொந்த ஊர் திரும்பவில்லை. பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளாவுக்கு வெளியே உள்ள உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக தெரிய வந்துள்ளது.