இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அதியுயர் பதவிகளுக்கு சம்பளம் வழங்கப்படாத மாதமாக கடந்த டிசம்பர் மாதம் அமைந்துள்ளது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பளம் வழங்கும் போது, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அல்லது அமைச்சர்கள் பதவிகள் கருத்திற் கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் நாடாளுமன்றத்தினால் வழங்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மேலதிக கொடுப்பனவு இன்றி 54,285 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகின்றது.

பிரதமரின் சம்பளம் பிரதமர் செயலகம் ஊடாக வழங்கப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவரின் சம்பளம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதோடு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான சம்பளம் அமைச்சுக்கள் ஊடாக வழங்கப்படுகின்றன.

எப்படியிருப்பினும் டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்களாக மாத்திரம் கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் குழப்பங்கள் காரணமாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் யார் என தெரியாமல் இருந்தது.எனினும் ஏற்பட்ட திருத்தங்களுக்கமைய ஜனவரி மாதம் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அல்லது அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கப்படாத சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.