ஐபோன் மேல் ஆசை: உயிருக்கு போராடும் சிறுவன்!

ஐபோன் வாங்குவதற்காக தனது கிட்னியை விற்ற சிறுவன் தற்பொழுது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உலக மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சாதனங்களில் முதன்மையானது செல்போன். அதிலும் பல வகைகளில் சாதாரணமாக கிடைக்கும் இந்த போன்களுக்கு மத்தியில், ஐபோன் மட்டும் பலருக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஏனென்றால் அந்த பிராண்ட், அதன் விலை இரண்டுமே சாதாரண மற்றும் நடுத்தரவர்க்க மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த வாங் என்ற சிறுவனுக்கு ஐபோன் 4 வாங்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. ஆனால் அந்த போன் வாங்க அவனிடம் பணமில்லை. இருந்தபோதிலும் போனை வாங்கியே ஆக வேண்டும் என துடித்த சிறுவன், 3200 டாலருக்கு தனது ஒரு கிட்னியை விற்று போனை வாங்கியுள்ளார். ஆனால் சரியான முறையால் ஆபரேஷன் செய்யப்படாததால்,  சிறுவனுக்கு மற்றொரு கிட்னியும் பாதிப்படைந்துள்ளது.

தற்போது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபோன் மோகத்தால் தங்களது மகன் உயிருக்கு போராடுவதை சிறுவனின் பெற்றோர்களால் ஜீரணிக்கமுடியாமலும், அவனுக்கு சிகிச்சை அளிக்க போதிய பணவசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.