19 வது மாடியிலிருந்து மனைவியை தூக்கிவீசி, கொடூரமாக கொலை செய்த கணவன்!

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் பகுதியில், 26 அடுக்குமாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பு கட்டடத்திற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இதில், ஜார்க்கண்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் பியூலாதேவி ஆகியோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகிறார். மேலும் அதற்காக அவர்கள் அங்குள்ள கூடாரத்தில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் சிலநாட்களுக்கு முன் கட்டட பணியில் இருந்த பியூலா தேவி, 19வது மாடியில் பணியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் அவர் வேலைபார்த்துக்கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் அவர் மரணத்தின் மீது சந்தேகமடைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டபோது,19-வது மாடியில் துப்புரவுப் பணியில் இருந்த பியூலாதேவியிடம் சந்தோஷ் குமார் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டதாக பணியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதனைதொடர்ந்து பியூலாதேவி கணவர் சந்தோஷ்குமாரிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, தீவிர விசாரணையில்,பியூலாதேவி கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள மற்ற தொழிலாளர்களுடன் சகஜமாக சிரித்து பேசிவந்ததாகவும், அப்படி பழகக் கூடாது என்று தான் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை என சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.

மேலும் இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில், ஆத்திரமடைந்த நான் எனது மனைவியின் தலையில் கல்லால் தாக்கியதோடு, அவரை 19-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.