அய்யா என் செருப்பைக் காணோம்!: காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சென்னை தொழிலதிபர்

தனது செருப்பைக் காணவில்லை என தொழிலதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது சென்னையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை இளைய தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர் ராஜேஸ்குப்தா. தொழிலதிபரான இவர், பாரிமுனை பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்திவருகிறார்.

இன்று இவர் ராஜேஸ்குப்தா தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதைப் படித்த காவலர்கள் அதிர்ந்துவிட்டனர்.

புகாரில் தொழிலதிபர் ராஜேஸ்குப்தா தெரிவித்திருந்ததாவது:

“இன்று தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சர்க்கரை நோய் பரிசோதனை மையத்திற்கு சென்றேன். அந்த மையத்தின் வாசலில் என்னுடைய 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை கழற்றி வைத்து சென்றேன்.

பரிசோதனை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வாசலில் விட்டு சென்ற என்னுடைய செருப்புகளை காணவில்லை. ரூ.800 மதிப்புள்ள அந்த செருப்புகளை கண்டுபிடித்துத்தர வேண்டும்” என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

புகாரை ஏற்று கொண்ட தண்டையார்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள் செருப்பு காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன தனது செருப்பைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக ஒரு செருப்பு விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இங்கு நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.