சிங்களவர்களை வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் கிராமம்!

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயதான சிங்களவர் ஒருவரின் சிகிச்சைக்கு தேவையான நான்கு லட்சம் ரூபா பணத்தை முஸ்லிம் கிராமம் ஒன்றை சேர்ந்தவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளனர்.

பொலன்நறுவை குடாபொக்குண என்ற முஸ்லிம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.ஏ. கருணாரத்ன என்பவர் வசித்து வருகிறார். குடாபொக்குண உப தபால் அலுவலகத்தில் அவர் 13 ஆண்டுகள் உப தபால் நிலைய பொறுப்பதிகாரியாக பணிப்புரிந்து வந்துள்ளார்.

ஒரு வருடங்களுக்கு முன்னர் கருணாரத்னவுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதுடன் அவர் தற்பொழுது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுநீரகம் ஒன்றை பொருத்த பெருந்தொகை பணம் செலவாகும் என்பதால், முஸ்லிம் கிராமத்தில் உள்ள அனைவரும் இணைந்து பணத்தை சேகரித்து கருணாரத்னவின் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளனர்.

கிராமவாசிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குமார் முன்னிலையில் இந்த பணத்தை கருணாரத்னவின் மனைவியிடம் கையளித்துள்ளனர்.

நாட்டில் சில இடங்களில் இனங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டாலும் இப்படி இனங்களுக்கு இடையில் ஐக்கியமாக ஒற்றுமையாக வாழும் மக்களும் இலங்கைக்குள் இருக்கின்றனர் என்பது இது சிறந்த உதாரணம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.