அரச வேலைவாய்ப்பு கோரி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் 140 நாட்களுக்கும் மேலாக தொடரப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக மத்திய அரசாங்கம் கபினட் ஒன்றினை கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் வட மாகண வேலையற்ற பட்டதாரிகளினால் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நடத்தப்பட்டு வந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுதருவதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுத்திருக்கின்றோம்.
இந்த காலப்பகுதிக்குள் எமக்குரிய தீர்வு கிடைக்காது போகுமானால் நாம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று வட மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்குமான மிக முக்கிய கலந்துரையாடலொன்று வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கலந்துரையாடல் நிறைவுற்றதைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவது தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துமூல அறிவிப்பு வட மாகாண ஆளுநரிடம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண முதலமைச்சரிடமும் சமர்ப்பிக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் முக்கிய செயற்பாட்டாளரொருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.