ஐ.நா.சபையின் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டாளர் பென் எமர்சன் சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகளை சந்தித்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல்திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அதிகாரி திரு. பென் எமர்சன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவையில் குறிப்பிட்டமை தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது கைதிகளை சந்திப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறை குறித்து குறிப்பிட்டார்.
இது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வழமையான நடவடிக்கையின் கீழ் கைதிகளை சந்திப்பதற்கான அனுமதி இவருக்கு வழங்கப்பட்டது என்று அமைச்சரவை கூட்டத்தின் போது தெளிவுபடுத்தப்பட்டதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதன்போது எதிர்காலத்தில் இவ்வாறான விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிற்கும் அறிவிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிகாட்டியாதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
ஐக்கியநாடுகள் சபையில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாமும் அதில் அங்கம் வகித்துள்ளோம். அதன் நடைமுறை விதிகளுக்கு இலங்கையும் கட்டுப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்படும் நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு முரண்படுவது நமக்கெதிராக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும். ஐக்கிய நாடுகள் சபையுடன் இராஜதந்திர ரீதியிலேயே நாம் விடயங்களை கையாண்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் அதாவது முன்னைய அரசாங்க காலப்பகுதியில் இவ்வாறான முரண்பாடான நிலை ஏற்பட்டதனாலேயே நாட்டிற்கு சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது .
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிஷ்டவசமாக சமகால அரசாங்கம் பதவிக்கு வந்ததினால் இலட்சக்கணக்கான இலங்கை மக்கள் பாதிப்பிற்குள்ளாகும் நிலைமை தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
பிரமர் ரணில் விக்கிரம சிங்க 2002ம் ஆண்டில் ஐக்கிநாடுகள் சபை முன்னெடுத்த இராணுவம் தொடர்பிலான உடன்படிக்கைக்கு கைச்சாத்திடவில்லை. இதனாலேயே இராணுவம் தொடர்பில் தற்பொழுது குறிப்பிடப்படும் சர்வதேச விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்கம் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் விசேடமாக காணிப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் இன்னும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பிலும் இன்னும் தீர்வை காண தவறியுள்ளோம்.
5வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட 70 தமிழ் கைதிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படவேண்டும் அல்லது அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் கொண்டுள்ளேன். இவ்வாறான விடயங்களில் இன்னும் தாமதம் உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் அவுஸ்ரேலியாவில் மருத்துவ கற்கை நெறியை மேற்கொள்வதற்காக செல்லவிருந்த தமிழ் மாணவர் உறவினர் நண்பர்களிடமிருந்து பிரியாவிடை பெறுவதற்காக அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தனர். இவர்கள் பணத்திற்காக கடத்தப்பட்டு திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டதையும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்கு படையினர் சிலரினால் இதுதொடர்பான படங்களுடனான தகவல்கள் வழங்கப்பட்டன. எனது பிள்ளையும் இந்த காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றிருந்தார். இந்த நிலை எனது பிள்ளைக்கும் ஏற்பட்டிருந்தால் எமது நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்தேன் . அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்தேன் . கடத்தப்பட்ட பெற்றோரை நாம் ஆரம்பத்தில் சந்தித்தபோது அவர்கள் என்மீதும் ஆத்திரப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் மகன் தந்தை ஆகியோர் என 2005ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதிக்கு மலர்மாலை அணிவித்தவரும் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் உங்களை பெரிதும் பாதிக்கும் என்று அப்போதைய ஜனாதிபதிக்கு நான் சுட்டிக்காட்டினேன்.
நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி எமசனுடன் வாய்மூலமான மோதலில் ஈடுபட்டுள்ளார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டதுடன் முன்னைய அரசாங்கம் ஐக்கியநாடுகள் சபை தொடர்பில் கடைப்பிடித்த கொள்கையை தற்போதைய அரசாங்கம் பின்பற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார்.