ஜூலை 14 வெளியீட்டில் குவியும் படங்கள்: என்னவானது தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு?

july14_3183955f

திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜூலை 14-ம் தேதி வெளியீடாக பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளன.

ஜிஎஸ்டி வரி மற்றும் கேளிக்கை வரி என தமிழ்த் திரையுலகின் மீது இரட்டை வரிவிதிப்பு முறையை கண்டித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழக திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. ஜூலை 7-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் வெளியாகவில்லை.

தற்போது தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டு, ஜூலை 7-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஜூன் 30-ம் தேதி வெளியீட்டு படங்கள் தொடர்ச்சியாக திரையிட்டு வருகிறார்கள். புதிதாக ‘ஸ்பைடர் மேன்’ படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு படங்கள் ஜூலை 14-ம் தேதி வெளியீடு என அறிவித்திருக்கிறார்கள். இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

‘பண்டிகை’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்கள் ஜூலை 14-ம் தேதி வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளார்கள். மேலும் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘நிபுணன்’ ஆகிய படங்கள் தணிக்கையில் பிரச்சினையில் சிக்கி, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது. அப்பிரச்சினை முடிவுக்கு வரும்பட்சத்தில் ஜூலை 14-ல் இவ்விரண்டு படங்களுமே வெளியாகும் எனத் தெரிகிறது.

ஒரே நாளில் 5 படங்கள் வெளியானால், எந்தவொரு தயாரிப்பாளருக்குமே லாபமின்றி போய்விடும். மேலும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

என்னவானது தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு?

தங்களுடைய படங்களின் வெளியீட்டு தேதியை முடிவு செய்தபின் அதனை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவிட்டுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்கள். ஆனால், இந்த அறிவிப்பை எந்தவொரு தயாரிப்பாளருமே பின்பற்றுவதில்லை என்பது இந்த அறிவிப்பிலிருந்து தெரிகிறது. ஜூலை 14-ம் தேதி வெளியீட்டு பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையீட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்று அன்றைய தினத்தில் வெளியாகும் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.