ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராச்சியத்தின் வரைபடத்தில் இலங்கை!

ias

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராச்சியத்தின் வரைபடத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அந்த அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக பிரதமரும், நீதி அமைச்சரும் கூறியுள்ளதாகவும் அந்த பொது பல சேனா சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த விடயத்தினை 2013ம் ஆண்டே எமது அமைப்பு கூறியிருந்தது. அதனை பாதுகாப்பு தரப்பினர் கருத்தில் கொள்ளவில்லை. தற்போது பொது பல சேனா அமைப்பை ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள சிலர் அந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இன்னும் பலர் இணைவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

இருந்த போதிலும், நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் என நாங்கள் சுட்டிக்காட்டவில்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் மனநிலையில் பாதுகாப்பு தரப்பினர் இருந்தனர்.

இதேவேளை, அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு ஆதரவாளர்களே இருந்தனர். அந்த அமைப்புக்கு ஆதரவானவர்கள் பேரூந்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டிருந்தனர்.

எனினும், பொதுபல சேனா அமைப்பே அந்த கலவரத்தின் பின்னணியில் இருப்பதாக உலக நாடுகளுக்கு பரப்பப்பட்டது. ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராச்சியத்தின் வரைபடத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அந்த அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக பிரதமரும், நீதி அமைச்சரும் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், 30க்கும் மேற்பட்டவர்கள் அந்த அமைப்புடன் தொடர்பை பேணி வருகின்றனர் என்பது நிதர்ஷனமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.