அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இரணைமடுக்குளம்! விவசாயிகள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி இரணைமடுக்குளம் இன்று அரசியல் நோக்கத்திற்கும் கருத்து மோதல்களுக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் பலர் தங்களது சட்டைப்பைகளை நிறைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வருடாந்தம் காலபோகத்தில் 59 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையும் சிறுபோகத்தில் 15 ஆயிரம் வரையான பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் பாரிய நீர்ப்பாசனக்குளங்களின் முக்கிய குளமாகக் காணப்படுகின்ற இரணைமடுக்குளத்தின் கீழேயே காலபோகத்தில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரும் சிறுபோகத்தில் எண்ணாயிரம் ஏக்கர் வரையிலும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது மாவட்டத்தில் நிலவுகின்ற வரட்சி காரணமாகவும் குளத்தின் புனரமைப்புப் பணிகள் காரணமாகவும் குளத்தினுடைய நீர்மட்டம் குறைவாகக் காணப்பட்டமையால் இவ்வாண்டு காலபோகத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த இலக்கை எட்டுமுடியாமலும் சிறுபோகத்தில் 890 ஏக்கர் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மழைவீழ்ச்சி:-

2010ம் ஆண்டு:- 1870.90 மில்லிமீற்றர்

2011ம் ஆண்டு:- 1822.40 மில்லிமீற்றர்

2012ம் ஆண்டு :- 1295.10 மில்லிமீற்றர்

2013ம் ஆண்டு:- 1234.10 மில்லிமீற்றர்

2014ம் ஆண்டு:- 1853.70 மில்லிமீற்றர்

2015ம் ஆண்டு:- 2096.40 மில்லிமீற்றர்

2016ம் ஆண்டு:- 1560.10 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் மேற்;குறித்த ஆண்டுகளில் காலபோகச்செய்கையை விட சிறுபோகச்செய்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலதிக விதைப்புக்கள்:

இரணைமடுககுளத்தின் தற்போதைய நீரின் அளவைக்கொண்டு 890 ஏக்கரில் சிறுபோகச்செய்கையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய வரட்சியினால் குளத்தின் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தில் உள்ளநிலையில் சுமார் 282ஏக்கர் வரையான நிரப்பரப்பில் மேலதிக பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது குளத்தில் இருக்கின்ற நீரை மேற்படி மொத்த செய்கையின் விநியோகங்களுக்கு வழங்கும் போது சட்டரீதியாக பயிர்செய்கை மேற்கொண்ட 890 ஏக்கருக்கும் உரிய முறையில் நீர் விநியோகம் செய்ய முடியாது போகுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டு குளத்தின் நீர் அளவைக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட ஏக்கரை விட மேலதிகமாக மூவாயிரம் ஏக்கர் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் 2013ம் ஆண்டு யூன் மாதம் 19ம் திகதி கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கையில் மேலதிக விதைப்புக்கள் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், காணிகளை உரிய முறையில் நீர்ப்பாசனத்திணைக்களம் கமக்கார அமைப்புக்கள் அளவீடு செய்து வழங்கவில்லை.

சட்டத்தை மீறிய பயிர் செய்கைகள் மேலதிக விதைப்புக்களுக்கு விவசாயிகளே காரணமே என அதிகாரிகள் விவசாயிகள் மீது குற்றம் சுமத்த முடியாது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் அப்போது மேலதிகமான விதைப்புக்களுக்கு தண்டப்பணங்கள் அறவிடுதல் மேலதிகமாக சட்டத்திற்கு முரணான விதத்தில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கைகளை அழித்தல் எதிர்காலத்தில் அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அரச மானியங்களை நிறுத்துதல், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

ஆனால் அந்தக்காலப்பகுதியில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2014ம் ஆண்டு அப்போதைய வரட்சி காரணமாக குளத்தினுடைய நீர் அளவைக்கொண்டு 850 ஏக்கர் வரையான நிலப்பரப்பில்சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது சிறுபோக செய்கைகக்கு ஏற்ற காணிகள் n தரிவு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டு அவற்றுக்குள் உள்ளடங்கியதாகவே பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுசிறுபோகச்செய்கை வெற்றியளித்துள்ளது.

அதாவது நீர்ப்பாசனத்திணைக்களத்திலிருந்த ஆளணிவெற்றிடம் பௌதீக வளப்பற்றாக்குறை என்பவற்றிற்கு மத்;தியிலும் நேர்த்தியான முறையில் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது மேலதிக விதைப்புக்கள் என்பது காணப்படவில்லை. அப்போது அதிகாரிகளின் நேர்த்தியான செயற்பாட்டால் விவசாயிகள் நன்மையடைந்தனர்.

மாறாக தற்போது மேற்கொள்ளப்பட் சிறுபோகச்செய்கையில் இவ்வாறு மேலதிக விதைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதற்கு அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் சில கமக்கார அமைப்புக்களின் பொறுப்பற்ற தன்மையும் இந்த மேலதிகமான விதைப்புக்களுக்கு காரணமாக அமைகினற்து.

அதாவது 2014ம் ஆண்டு போன்று உரிய முறையில் பயிர்செய்கைக்கு உரிய காணிகளை வரையறை செய்து வழங்கியிருக்கின்ற வேண்டிய பொறுப்பு நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் இருந்திருக்க வேண்டும்.

அடுத்து உள்ளடக்கப்படுகின்ற காணிகளுக்கு பொறுப்பாக விருக்கின்ற கமக்கார அமைப்புக்கள் குறித்த காணிகளை இரணைமடுககுளத்தின் கீழ் உள் ள 22 கமக்கார அமைப்புக்களுக்கும் உரிய முறையில் பகிர்ந்தளித்திருக்க வேண்டும்.

இவ்வாறு செயற்பட்டிருந்தால் இவ்வாறான மேலதிக விதைப்புக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பற்றுப்போயிருக்;கும்.

இவ்வாறு விடப்பட்ட தவறுகளினால் அதி உச்ச செய்கையாக 890 ஏக்கர் தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதையும் மீறி மேலதிக 282 ஏக்கர் பயிர்செய்கை என்பது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்றாகவே காணப்படுகின்றது.

இந்த மேலதிக விதைப்புக்களை அடிமட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகள் எவரும் மேற்கொள்ளவில்லை. சில முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களே இவ்வாறு துஸ்பிரயோககங்களை செய்திருக்கின்றார்கள் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பயிரழிப்பு:

மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட பயிர் செய்கைகளை அழிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தற்போது பயிரழிப்புக்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

விதைநெல் ஒருமூடை 4500 ரூபாய் அதற்கான பண்படுத்தல் கூலி ஏனைய இதர செலவுகள் என்பவற்றைச் செய்து ஒரு மாதங்கள் கடந்த நெற்பயிர்களே இவ்வாறுஅழிக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் உரிய முறையில் நிலத்தை அளவீடு செய்து பயிர்செய்கைக்கு அனுமதித்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

நீரப்பாசனப்பொறியிளாளர் கருத்து தெரிவிக்கும் போது,

குளத்தின் நீர் மட்டமான 8 அடி 8 அங்குலமாக இருப்பதால் அந்த நீரை மேலதிக விதைபபுக்களுக்கும் பயன்படுத்தும் போது சட்டரீதியாக பயிர்செய்கை மேற்கொண்ட விவசாயிக்கு இரண்டு தடவைக்கு அவர்களுக்கு வழங்க முடியாமல் போகும்.

ஆகவே இவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதில் மேலதிக செய்கை என்பது அதிகாரிகளது தவறு மட்டுமன்று விவசாயி அமைப்புக்களினதும் விவசாயிகளினது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பாக கமநல உதவி ஆணையாளர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது கடந்த இரண்டு வாரங்களாக மேலதிக பயிர் செயகைகள் தொர்பாக கமநலஅபிவிருத்தித்திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டு அவ்வாறான பயிர்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுககு உரமானியம் அரச உதவித்திட்டங்களை நிறுத்துவதெனவும் மேலதிக செய்கைகளை அழிப்பதற்கு உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதன்படி பயிர்செய்கைகள் அழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

செய்கை மேற்கொண்ட ஒவ்வொரு விவசாயியும் தலா ஒரு ஏக்கருக்கும் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர்ப்பங்கைப்பெற்று பயிர்செய்கை மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்த சட்டவிரோத மேலதிக விதைப்புக்களால் சுமார் 8.4 மில்லியன் ரூபா பெறுமதியான பயிர் செய்கைகளை மேலதிகமாக மேற்கொண்டு ஒரு சிலரே இலாபம் அடையும் நிலை காணப்படுகின்றது எனத்தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்;ள மொத்தச்சனத்தொகைக்கான உணவுத்தேவைக்கு 22 ஆயிரத்து 310 மெற்றிக்தொன் நெல் வருடம் ஒன்றுக்குத்தேவையாக காணப்படுகின்றது.

கடந்த காலபோகத்தின்போது 16 ஆயித்து 800 மெற்றிக்தொன் நெல் மாத்திரமே கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இதனைவிட அடுத்தாண்டு பயிர்செய்கைக்கான விதைநெல் தேவையும் காணப்படுகின்றது.

இவ்வாறு அதிகளவான தேவைகள் இருக்கின்ற போது இருக்கின்ற நீரைச்சிக்கனமாகப்பயன்படுத்தி உரிய முறையில் பயிர்செய்கையைப் மேற் கொள்ளாது பலரது பொறுப்பற்ற தன்மையே ஏழை விவசாயிகளைப்பாதிக்கின்றது.

இதனைவிட நிலக்கீழ் நீரைப்பாதிக்கும் வகையில் பாதிக்கும் வகையில்

குழாய்நீர்களை பயன்படுத்தியும் ஏனைய ஆற்றுநீர்களைப் பயன்படுத்தியும் அதிகளவான பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பாரிய நிதியைக் கொண்டு இரணைமடுக்குளத்தின் அபிவிருத்தி குளத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால் வீதிகள் என்பன இபாட்திட்டத்தின் கீழும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் மூலம் ஒரு சிலர் மாத்திரம் நன்மையடைக்கின்றனரே தவிர ஏழை விவசாயிகள் நன்மையடைந்ததாக இல்லை யென்றும் குறிப்பாக இவ் அபிவிருத்தித்திட்டங்களில் இருபது குழாய்க்கிணறுகள், அறுபது திறந்த கிணறுகளில் கூடுதலான கிணறுகள் ஒரு சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் காணிகளிலே காணப்படுகின்றன.

குறித்த விடயங்கள் தொடர்பில் சகலரும் பொறுப்புணர்வுடன் செயற்படும் போதுதான் ஏழைவிவசாயிகள் எதிர்பார்த்த நன்மையடைய முடியும்.