சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காள தேசத்தை இன்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்காள தேசம் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தவான் (60), தினேஷ் கார்த்திக் (94), ஹர்திக் பாண்டியா (80) மற்றும் ஜடேஜா (32) ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் டோனி ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.
பின்னர் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்கர் ஆகியோர் களம் இறங்கினார்கள். சர்கர் 2 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த சபீர் ரஹ்மான் ரன்ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
இந்திய வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காள தேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறிக்கொண்டே இருந்தனர்.
முஷ்பிகுர் ரஹிம் (13), ஷாகிப் அல் ஹசன் (7), மெஹ்முதுல்லா (0), மொசாடெக் ஹொசைன் (0), மெஹெதி ஹசன் மிராஸ் (24), சன்சாமுல் இஸ்லாம் (18), ருபெல் ஹொசனை் (0) ரன்னிலும் வெளியேற வங்காள தேசம் 23.5 ஓவரிலேயே 84 ரன்னில் ஆல்அவுட் ஆகி தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்தியா 240 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 4-ந்தேதி எதிர்கொள்கிறது.