கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணி நாங்கள்: தமீம் இக்பால்

வங்காள தேசம் அணி சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பிடித்துள்ளது. அந்த அணி ‘ஏ’ பிரிவில் உள்ளது. அந்த அணியுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. மூன்று முன்னணி அணிகளை எதிர்த்து விளையாடி அரையிறுதிக்கு வர வங்காள தேசத்திற்கு மிகக்கடினம்.

அந்த அணியின் தொடக்க வீரரும், அனுபவ வீரருமான தமீம் இக்பால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

எங்களை எளிதான அணி என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தமீம் இக்பால் கூறுகையில் ‘‘நாங்கள் ஏராளமான தோல்விகள், கடின முயற்சி மற்றும் விமர்சனங்களை கடந்து வர வேண்டியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.

நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஒருநாள் கிரிக்கெட்டில் அனேகமாக உலகளவில் அதிக வெற்றிகளை பெற்ற அணி வங்காள தேசம்தான். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்காள தேச அணி வீரர்களிடையே அதிகளவில் நம்பிக்கை உள்ளது. 10 வருடத்திற்குப் பிறகு தற்போது வங்காள தேசம் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது.

ஐ.சி.சி. தரவரிசையில் நாங்கள் 6-வது இடத்திற்கு முன்னேறியது மிகவும் எளிதாக வந்தது அல்ல. அதற்காக நாங்கள் உண்மையிலேயே அதிக அளவில் உழைத்தோம். அந்த கடின உழைப்பால்தான் இது வந்துள்ளது. அதை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது முக்கியமானது. நீங்கள் எப்படி சிறந்தவர்கள் என்பதை காட்டுவதற்கு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி சிறந்த தொடராக இருக்கும்.