காலநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் 05 ஆம் திகதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

சில பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாகவே தற்போது கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இதற்கமைய இன்று நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 150 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யுமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல்,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அதிகூடிய மழையை எதிர்பார்க்க முடியும்.

கடும் மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென்பதனால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்மேல் மாகாணங்களைத் தவிர்ந்த நாட்டின் ஊவா,கிழக்கு ஆகிய ஏனைய மாகாணங்களில் மாலை வேளைகளில் மட்டும் மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்பு ஹம்பாந்தோட்டையூடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசம் மிகவும் கொந்தளிப்புடன் இருக்குமென்றும் காற்று மணித்தியாலத்திற்கு சுமார் 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் வானிலை அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுவது அவசியமென்றும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.