வன்முறை தலைதூக்க இடமளிக்கக் கூடாது! இனவாத தீய சக்திகளுக்கு உடனடி நடவடிக்கை தேவை!

நாட்டில் மீண்டும் அமைதியை குழப்பி நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளி விடும் ஒரு முயற்சியில் சில தீய சக்திகள் கங்கணம் கட்டி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சட்டம் ஒழுங்கை பேணுவதில் பொலிஸாரும், பாதுகாப்புத் தரப்பும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே சிறுபான்மை மக்களின் கோரிக்கையாகும்.

சில இனவாதச் சக்திகள் சட்டத்தைக் கையிலெடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதையே தொடர்ந்து பார்க்க முடிகிறது.

கலவரங்களையும், வன்முறைகளையும் தோற்றுவிப்போருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறது.

சிறுபான்மைச் சமுகங்களை ஆத்திரமூட்டச் செய்து தமது இலக்கை அடைவதற்கே இனவாதச் சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்குத் தீனி போடுவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகளும் தயாராகவே இருக்கின்றன. இதனை கடந்த சில நாட்களில் நன்றாக அவதானிக்க முடிந்துள்ளது.

சிங்கள – முஸ்லிம் கலவரமொன்றைத் தோற்றுவிக்கும் முனைப்பிலேயே இனவாதச் சக்திகள் உள்ளன.

கடந்த சில வாரங்களாக சிறுபான்மையினரை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்கள், பள்ளிவாசல் தாக்குதல், வர்த்தக நிலையங்கள் மீதான தீவைப்புச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரால் ஒருவரைத்தானும் கைது செய்ய முடியவில்லை.

இது ஏன் என்ற கேள்விக்குக் கூட மௌனமே பதிலாகக் கிடைக்கிறது.

பௌத்த சிங்களவர்களின் நலனை மட்டும் பேணுவதன் மூலம் தமது அரசியல் இலக்கை அடைவதில் ஒரு கட்சி தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றது.

இனவாதச் சக்திகளுக்கு தீனி போட்டு வளர்ப்பதில் அக்கட்சி ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்றது. இது ஒன்றும் மூடி மறைக்கப்படக் கூடிய சங்கதியல்ல.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், அமைதியைச் சீர்குலைத்தால் யாராக இருப்பினும் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படுவரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிலிருந்து அறிவித்திருக்கிறார்.

அவுஸ்திரேலியா சென்றிருக்கும் ஜனாதிபதி, பல்வேறுபட்ட வேலைப்பளுவுக்கு மத்தியிலும் நாட்டில் இன்று பற்றி எரியும் இனவாதத் தீயை அணைப்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும்.

அவுஸ்திரேலிய விஜயத்தின் போது நேற்றுமுன்தினம் அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நாட்டு நிலைமைகள் தொடர்பாக அவசரக் கூட்டமொன்றை நடத்தி கடுமையான உத்தரவுகளை அவர் பிறப்பித்திருக்கிறார்.

இதன் மூலம் நாடு எந்தளவுக்கு பாரதூரமான சவாலுக்கு முகம் கொடுத்திருக்கின்றது என்பதை ஊகித்துணரலாம்.

இதேபோன்றுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பாதுகாப்புத் தரப்பு மற்றும் பொலிஸாருக்கு கடும் உத்தரவுகளையும், பணிப்புரைகளையும் விடுத்திருக்கிறார்.

ஒரு இனத்தின் மீது, மதத்தவர் மீது அடாவடித்தனத்திலீடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி சட்டத்தை அமுல்டுத்துமாறு பிரதமர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

பொலிஸார் பக்கச் சார்பாக நடக்க முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடலாமெனவும் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.

அதேசமயம் நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பேணத் தவறினால் நாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகலாமென அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் எச்சரித்திருக்கிறார்.

தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சிறுபான்மைச் சமூகங்களை பகடைக் காய்களாக பயன்படுத்த தீய அரசியல் சக்திகள் முனைவதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த இனவாத செயற்பாடுகளை அரசியல் சக்திகள் உள்ளும் புறமுமாக நின்று தமது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.

சில கட்சிகள் நியாயத்தின் பக்கம் நின்று நேர்மையாக குரல் கொடுக்கின்ற போதிலும் பெரும்பான்மையானவர்கள் இதனை தமது அரசியல் சுயநலனுக்கே பயன்படுத்த முனைவதை அவர்கள் விடுக்கும் அறிக்கைகளே காட்டிக் கொடுத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இவர்கள் குளம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிப்பவர்களாகவே உள்ளனர். இது விடயத்தில் விழிப்புடனிருக்க வேண்டும்.

மூத்த ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகரும் மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவருமான விக்டர் ஐவன் முஸ்லிம்கள் விடயத்தில் கரிசனை காட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு தாக்கப்படுகின்றது. அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இவ்வாறு அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

முஸ்லிம்களும் இந்த நாட்டு மக்களே. பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உரித்துடையவையாகும்.

இந்த மண் முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும். இதனை மறுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்பதை அவர் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்கள் தொடர்பான இவ்விடயத்தை சந்தைப் பொருளாக மாற்றி அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்க முடியாது.

இனவாதத் தீயில் நாட்டை மூழ்கடிக்க இடமளிக்கவும் கூடாது. அரசு உத்தரவுக்கு அமைய பாதுகாப்புத் தரப்பும், பொலிஸாரும் தமது கடமையை சரிவரச் செய்ய வேண்டும்.

பாரபட்சம் பார்க்கக் கூடாது. 1958ல் நடந்த கலவரத்தின் போது படையினர் கடமையை சரிவரச் செய்ததை மறுந்து விட முடியாது.

ஆனால் 83ல் படைத் தரப்பு சிங்களவர் பக்கம் நின்றது. 2014 தர்கா நகர் தாக்குதலில் மௌனம் காத்தனர். ஆனால் மறைமுகமாக இனவாதிகளுக்கு ஒத்துழைத்தனர்.

அதே பாணியில்தான் சில நாட்களாக நடக்கும் நிலைமைகள் காட்டுகின்றன. அரசு இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறிவிடும்