ரஜினிகாந்த் முதல்வராக கனவு காண வேண்டாம்: சீமான் தாக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இத்தனை ஆண்டுகளாக வேறு மாநிலத்தவர்களே தமிழகத்தை ஆண்டுள்ளனர். தமிழகத்துக்கு வாழ வரும் வெளி மாநிலத்தவர்கள் இனியும் எங்களை ஆள வேண்டும் என்று நினைக்க வேண்டாம். கர்நாடகாவில் இருந்து நடிக்க வந்த ரஜினி பச்சை தமிழன் என்று கூறுகிறார். அப்படியென்றால் இங்குள்ள நாங்களெல்லாம் யார்?

ரஜினி அரசியலில் கால் பதித்து முதல்வராக வேண்டும் என்று கனவு காண வேண்டாம். அந்த கனவு இனி பலிக்காது. நாங்களே அவரை முறியடிப்போம்.

தமிழகத்தில் தமிழர் ஆட்சி விரைவில் மலரும். அப்போது சிங்கப்பூரை விட வளம் கொழிக்கும் நாடாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். எல்லா வளமும் இங்கு இருக்கிறது. அதனை வைத்து தமிழகத்தை செழிப்படைய செய்வோம்.

இன்று ஜனநாயகம் பேசுபவர்கள் தமிழகத்தை பல்வேறு பிரச்சினைகள் வாட்டி எடுத்த போது என்ன செய்தார்கள். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் தர மாட்டார்கள். ஆனால் அங்கிருந்து வந்தவர் மட்டும் தமிழ்நாட்டில் தலைவராகலாமா? அதனை ஒரு போதும் எங்களால் அனுமதிக்க முடியாது.

பா.ஜனதா கட்சி ரஜினிக்காக கதவை திறந்தே வைத்திருப்பதாக கூறுகிறது. கவனமாக இருங்கள் வேறு யாரும் நுழைந்து விடப் போகிறார்கள்.

தமிழர்களின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் அய்யா சி.பா.ஆதித்தனார். பாமரனும் தமிழ் படிக்க கற்றுக் கொடுத்தவர்.

கேள்வி:- தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் சீமானின் பேச்சுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்:- செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பந் தேன்வந்து பாயுது காதினிலே என்று பாடினான் பாரதி. அவரது வழியில் வந்த நாங்கள் எங்கள் உரிமையை கேட்கிறோம். தமிழகத்தை நாங்களே ஆளுவோம் என்று கூறுவது எப்படி அச்சுறுத்தலாகும்.

அது போன்று கூறுபவர்கள்தான். தமிழர்களாகிய எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் உரிமை பற்றி நான் பேசியதைதான் இன்று பல தலைவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தை தமிழரே ஆள வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுத்த பின்னர் தான் இன்று பலரும் அதைப் பற்றி பேசுகிறார்கள்.

கே:- ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டிருக்கிறாரே?

ப:- அ.தி.மு.க. இரு அணி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமர் மோடியை போட்டி போட்டு சந்திக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது. அப்படி இருக்கும் போது இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.